Friday, February 20, 2009

புதிய செய்தி- புதினம்.காம்


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9:30 நிமிடத்தில் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா வான் படையினரின் தலைமையக கட்டடம் அதற்கு அருகில் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் 5 வான் படையினர் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளதாக படை உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள சிறிலங்கா வான் படைத்தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பு நோக்கி வருவது கதுவீயில் அவதானிக்கப்பட்டதனையடுத்து சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் தன்னியக்கமாக இயங்கத் தொடங்கின.

இதனை அடுத்து தரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த முப்படையினரும் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் கொழும்பு நகரில் பெரும் வெடிச்சத்தங்கள் சுமார் ஒரு மணிநேரமாக கேட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஒன்றரை மணித்தியாலம் மின் வெளிச்சம் எதுவும் இன்றி கொழும்பு நகரம் இருளில் மூழ்கியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவிக்கையில், "கொழும்பு நகருக்குள் பிரவேசித்த புலிகளின் இரண்டு வானூர்திகளில் ஒன்றை படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் வானோடியின் உடலம் கட்டுநாயக்காவில் கண்டு பிடிக்கப்பட்டதாகவும்" கூறினார்.

அத்துடன், "இறைவரி திணைக்கள கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்த 41 பேர் காயமடைந்திருந்ததாகவும்" அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறினார்.

ஆனால், வான்படை தலைமையக கட்டடம் மீது குண்டு வீழ்ந்து வெடித்ததாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. அத்துடன் கட்டுநாயக்காவில் உள்ள வான்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

புலிகளின் வானூர்தி தாக்குதல் தொடர்பில் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல் குறித்து சுயாதீனமான தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் இரண்டாவது வானூர்தி புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக புத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புலிகளின் இந்த வானூர்தி தாக்குதலில் ஏற்பட்ட உண்மையான சேத விபரங்கள் அல்லது எவ்வாறான தாக்குதல் இடம்பெற்றது என்பது பற்றிய சுயாதீனமான தகவல் எதனையும் பெற முடியாத வகையில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ஊடகங்களுக்கு மறைமுகமான தடை உத்தரவினை இன்றிரவு பிறப்பித்திருக்கின்றது.

No comments:

Post a Comment